நன்னடத்தை மீறிய ரவுடி மீண்டும் கைது
நன்னடத்தை மீறிய ரவுடி மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர் பொன்மலைப்பட்டி கடை வீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பரிடம் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு டாஸ்மாக் பாரை திறப்பதற்காக பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அவரை வழிமறித்த பொன்மலை மலையடிவாரம் மதுரை வீரன் சாமி கோவில் தெருவை சேர்ந்த பிரசன்னா (28) தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்காட்டி மிரட்டி ராஜேந்திரனிடம் ரூ.2,600 மற்றும், மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ராஜேந்திரன் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பிரசன்னாவை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். பிரசன்னா மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நன்னடத்தையை மீறியதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.