ரூ.1,627 கோடி மதிப்பில் பாரத்நெட் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
12,525 கிராமங்கள் பயன்அடையும் வகையில் ரூ.1,627 கோடி மதிப்பில் பாரத்நெட் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (டான்பிநெட்) குமரி மாவட்டம், தக்கலை முத்தலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
பாரத்நெட் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் 'டான்பிநெட்' நிறுவனம் என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 'ஜிபிபிஎஸ்' அளவிலான அலைக்கற்றை அனைத்து 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும்.
தொகுப்புகள்
இத்திட்டம் ஏ, பி, சி மற்றும் டி என்ற 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, தொகுப்பு ஏ-ல் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு பி-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும்,
தொகுப்பு சி-ல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், தொகுப்பு டி-ல் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்பட உள்ளது.
கிராமத்தில் துரித சேவை
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய சேவைகளை வழங்க இயலும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை அதிவேக இணையதள சேவையை பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும்.
அதோடு புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மை அடையவும் இத்திட்டம் வழி வகுக்கும். தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளை பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல் தொழில்நுட்ப திறன் இடைவெளியை குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.கே.கமல் ச்கிஷோர், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் எ.ராபர்ட் ஜெரார்ட் ரவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.