ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களையும் உடனே நிரப்பவேண்டும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற அறிவிப்பின்படி பணிவிதிகளை உடனே வெளியிட வேண்டும், பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகங்கள் வெறிச்சோடின
மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேற்கண்ட அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
மேற்கண்ட அலுவலகங்களை நாடி பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 599 அலுவலர்களில் 35 பேர் விடுமுறையில் உள்ள நிலையில் 175 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டனர். மீதம் உள்ள 389 பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 64.94 சதவீதம் ஆகும். முக்கிய பிரிவை சேர்ந்த அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அத்தியாவசிய பணிகள் அதிகம் பாதிக்கப்பட்டது.
திருவாடானை
திருவாடானையில் ஜி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாடானை யூனியனில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சி.பி.எஸ். திட்டத்தில் இறந்த, ஓய்வு பெற்ற, ஓய்வு பெறும் அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 309-ன் படி சி.பி.எஸ்.-ஐ முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று யூனியன் அலுவலகம் அலுவலர்கள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று அலுவலகத்திற்கு தங்களின் பணி நிமித்தமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.