ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும்
தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு செயலியில் பதிவேற்றம் செய்வதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் செயலாக்கத்தில் அதிக வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், பணித்தளத்தில் வருகை பதிவை காலை மற்றும் மதிய வேளைகளில் புவிக்குறியீடு அடங்கிய புகைப்படத்துடன் தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு (என்.எம்.எம்.எஸ். செயலி) மூலம் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த 21.5.2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் எளிதான நிர்வாகத்தையும், பணிபுரியும் பணியாளர்கள் கண்காணிப்பையும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 16.5.2022 முதல் 20 அல்லது 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மஸ்டர்ரோல் வழங்கப்படும் அனைத்து பணியிடங்களிலும் தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருகிற 1-ந்தேதி முதல் அமல்
தற்போது, இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம், 1.1.2023 முதல் அனைத்து மாநிலங்களிலும், தனிநபர் சார்ந்த பணிகள் நீங்கலாக எஞ்சிய அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கும் வருகைப்பதிவை தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 1.1.2023 முதல் தனிநபர் சார்ந்த பணிகள் நீங்கலாக எஞ்சிய அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப்பணிகள் நடைபெறும் பணியிடங்களில் பயனாளிகள் வருகைப்பதிவை காலை மற்றும் மாலையில் புவிக்குறியீடுடன் கூடிய புகைப்படத்துடன் தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு செயலி மூலம் அமல்படுத்த வேண்டும்.
காலை 7 மணிக்கு வர வேண்டும்
ஆகவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் அனைவரும் பணி நடைபெறும் இடத்திற்கு காலை 7 மணிக்கு சென்று தங்கள் வருகையினை தேசிய கைப்பேசி கண்காணிப்பு அமைப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.