தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தம்


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ஓணப்பண்டிகை தொடங்கியும் தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால், அதிகளவில் இறக்குமதி செய்ததால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

கேரளாவில் ஓணப்பண்டிகை தொடங்கியும் தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால், அதிகளவில் இறக்குமதி செய்ததால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தோவாளை மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பூக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

ஓணப்பண்டிகை

இந்தநிலையில் கேரளாவில் புகழ்பெற்ற ஓணப்பண்டிகை நேற்று தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் அனைத்து வீடுகள் முன்பு பல வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிடுவார்கள்.

இதற்காக கேரள வியாபாரிகள் விழா தொடங்கிய முதல் நாளிலேயே குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை அதிகளவில் வாங்கிச் செல்வார்கள். இதனால், இந்த 10 நாட்களும் தோவாளை மார்க்கெட் களைகட்டி காணப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு ஓணப்பண்டிகை தொடங்கியும் வியாபாரிகள் தோவாளை மார்க்கெட்டுக்கு வருகை தரவில்லை. இதனால், பூக்கள் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

விற்பனை மந்தம்

பூ வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், பொதுவாக ஓணப்பண்டிகை தொடங்கியதும் வண்ண பூக்களுக்கு கடும் கிராக்கி இருக்கும். மார்க்கெட்டுக்கும் வெளியூர்களில் இருந்து அதிகளவில் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஓணப்பண்டிகை தொடங்கியும் கேரள வியாபாரிகள் எதிர்பார்த்த அளவில் வருகை தரவில்லை. இதனால் வியாபாரம் மந்தமாக உள்ளது. இதன்காரணமாக இறக்கமதி செய்யப்பட்ட பூக்கள் தேக்கநிலைக்குள்ளானதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். விைல குறைத்து விற்பனை செய்யப்படுவதால் பூ விவசாயிகளும், வியாபாரிகளும் கவலையில் உள்ளதாக கூறினார்.

மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.170, பிச்சி ரூ.350, மல்லி ரூ.700, முல்லை ரூ.300, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.50, சம்பங்கி ரூ.700 தாமரை(ஒரு எண்ணம்)ரூ.15, கோழி பூ ரூ.60, பச்சை ரூ.8, மஞ்சள் கிரேந்தி ரூ.50, சிவப்பு கிரேந்தி ரூ.50, சிவந்தி (மஞ்சள்)ரூ.220, சிவந்தி (வெள்ளை)ரூ.260, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.120 ரோஸ்(பாக்கெட்)ரூ.20, ஸ்டம்புரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.160 என விற்பனையானது.


Next Story