சாராய விற்பனையை தடுக்க வேண்டும்


சாராய விற்பனையை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 2:48 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் தாலுகாவில் சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம், பெண்கள் மனு கொடுத்தனர்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் தாலுகாவில் சாராயம் விற்பனையை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம், பெண்கள் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த கூட்டத்தில் கீழ்வேளூர் தாலுகா வெண்மணி அருகே காரியமங்கலம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த போது அவர்கள் கூறியதாவது:-

சாராயம் விற்பனை

வெண்மணி, அய்யடிமங்கலம், கிள்ளுகுடி, காவலகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல நாட்களாக சாராயம் விற்பனை நடக்கிறது. அந்த சாராயத்தை ஆண்கள் குடித்து வருவதால் எங்களது குடும்பங்களில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.

இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். குறிப்பாக காவலகுடி பகுதியில் மர்ம கும்பல் முகாமிட்டு சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்து சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

வீட்டுமனைப்பட்டா

இதேபோல் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூண்டி அய்யனார் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா இல்லை. வீட்டுமனைப்பட்டா வழங்ககோரி பலமுறை மனுக்கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வழங்கும் வீடு கட்டும் திட்டத்தில் சேர முடியவில்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவை உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story