உப்பள பாத்திகள் மழைநீரில் மூழ்கின


உப்பள பாத்திகள் மழைநீரில் மூழ்கின
x

தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகள் மழைநீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகள் மழைநீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

உப்பு உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்காக பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏராளமான பாத்திகளும் அமைந்துள்ளன. அதுபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் உப்பு உற்பத்தியும் களைகட்டி இருந்தது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல ஊர்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதே போல் பனைக்குளம், அழகன்குளம், தேவிபட்டினம் உள்ளிட்ட பல ஊர்களிலும் நல்ல மழை பெய்தது.

உப்பள பாத்திகள் திடீரென பெய்த பலத்த மழையால் தேவிபட்டினம் அருகே கோப்பேரிமடம் பகுதியில் உள்ள அனைத்து உப்பள பாத்திகளில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் கல் உப்பு விளைச்சல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பாத்தியில் இருந்து பிரித்து எடுத்து மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த கல்உப்புகள் தொடர் கோடை மழையால் மழை நீரில் நனைந்து வீணாக கரைந்து ஓடி வருகின்றது. திடீரென பெய்து வரும் தொடர் கோடை மழையால் உப்பளப்பாத்திகள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளதால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.


Next Story