உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பர திருவிழா
திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பர திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்
திட்டச்சேரி:
திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பர திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்
உத்தராபதீஸ்வரர் கோவில்
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது. தெருவை அடைத்துக்கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர்.
தெருவடைத்தான் சப்பரம்
சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். இதில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
வடம்பிடித்து இழுத்தனர்
இதில் திருச்செங்காட்டங்குடி, திருமருகல், புதுக்கடை, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், கீழப்பூதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.