அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்
அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு துரை.ரவிக்குமார் எம்.பி. அறிவுரை கூறினார்.
விழுப்புரம்;
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் துரை.ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, ச.சிவக்குமார், ஏ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாடு திட்டம், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் துரை.ரவிக்குமார் எம்.பி. கேட்டறிந்தார்.
கடைகோடி மக்களுக்கும்...
அதனை தொடர்ந்து அவர் அனைத்துத்துறை அதிகாரிகளிடம் கூறுகையில், அலுவலர்கள் அனைவரும் ஊராட்சிகள்தோறும் ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வளர்ச்சி திட்டப்பணிகள் முடிவுற்றாலும், தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றத்தன்மை குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு அதனை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் சொக்கலிங்கம், கலைச்செல்வி, சச்சிதானந்தம், விஜயகுமார், தனலட்சுமி, அமுதா ரவிக்குமார், உஷா, சங்கீதஅரசி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.