இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்
வாலாஜாவில் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றி மாணவ-மாணவிகளை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா
வாலாஜாவில் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றி மாணவ-மாணவிகளை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி கட்டிடம்
வாலாஜா நகராட்சி மார்க்கெட் நடுநிலைப்பள்ளி தினசரி மார்க்கெட் அருகில் தேசிய நெடுஞ்சாலையினை ஒட்டி உள்ளது. இந்தப் பள்ளி நுழைவு வாயில் மற்றும் வகுப்பறைகள் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன.
கடந்த 2002-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஜி.கே.மூப்பனாரால் வழங்கப்பட்ட நிதியில் கட்டப்பட்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் சுமார் 600 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
நாளடைவில் இந்த வகுப்பறை கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிக்காமல் போனதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
விரிசல்
பள்ளி கட்டிடம் அதிகளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கட்டிட மேற்பரப்பில் செடி, கொடிகள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது எப்போது வேண்டுமானாலும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை காணப்படுகிறது. இந்த கட்டிட சுவற்றின் பக்கத்திலேயே மாணவ-மாணவிகள் இருசக்கர வாகனங்களை விட்டுச் செல்கின்றனர்.
மேலும் அந்த வளாக பகுதியில் விளையாடுகின்றனர். எனவே, மாணவ-மாணவிகளின் நலனை கருதி உடனடியாக இந்த கட்டிடம் இடித்து, அகற்றப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.