பள்ளி தகவல் பலகையில் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்ட விவரம் இடம்பெற வேண்டும்


பள்ளி தகவல் பலகையில் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்ட விவரம் இடம்பெற வேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி தகவல் பலகையில் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்ட விவரம் இடம்பெற வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் ஹர்சகாய்மீனா உத்தரவிட்டார்.

ராமநாதபுரம்

பள்ளி தகவல் பலகையில் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்ட விவரம் இடம்பெற வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் ஹர்சகாய்மீனா உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டம்

மத்திய அரசு இந்திய அளவில் 117 பின்தங்கிய மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அந்த மாவட்டங்களை முன்னேறி வரும் மாவட்டமாக அறிவித்து அந்த மாவட்டம் வளர்ச்சி பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. அதன்படி இந்த மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்டம் மற்றும் வளர்ச்சிதுறை அரசு சிறப்பு செயலாளர் ஹர்சகாய் மீனா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கர்ப்பிணிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உணவு வகைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை கவரும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கு சோப் பயன்படுத்தி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

தகவல் பலகை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை செய்ய வேண்டும். மாவட்ட அலுவலர்கள் களப்பணிகளின் போது முதன்முதலில் பள்ளிக் கழிப்பறைகளை ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்ட நாள், நேரம், சுத்தம் செய்த பணியாளர், பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கண்டிப்பாக வைக்க வேண்டும். மாவட்டத்தில் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராமங்களில் ஐ ஆம் கலாம் போன்ற சிறந்த திரைப்படங்களை திரையிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஊக்கப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story