ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில்;குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடித்தது


ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயில்;குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடித்தது
x

ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலால் குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடித்தது.

ஈரோடு

ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலால் குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடித்தது.

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால் ஈரோட்டில் எதிர்பார்த்த மழை இல்லாததால் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

பகல் நேரத்தில் அவசியம் இல்லாமல் வெளியே வராமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். வேலை காரணமாக வெளியே சுற்றுபவர்களும் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமைக்கு பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சாலையில் நடந்து சென்றபோதும், இருசக்கர வாகனங்களில் சென்றபோதும் கை, கால்களின் தோலில் சுடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள் குடை பிடித்தபடியும், சேலை, துப்பாட்டாவை தலையில் அணிந்து கொண்டு செல்வதையும் காணமுடிந்தது.

வெப்ப சலனம்

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கிறது. இதனால் மக்கள் குளிர்பானங்களை விரும்பி பருகுகிறார்கள். குறிப்பாக பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பதனீர், மோர், பழ ஜூஸ் வகைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. தர்பூசணிகளும் ஆங்காங்கே சாலையோரமாக விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

ஈரோட்டில் நேற்று அதிகபட்சமாக 98 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அதேசமயம் 102 டிகிரி வெயிலுக்கு சமமான வெப்ப சலனம் காணப்பட்டதாகவும் வானிலை அறிக்கையில் பதிவானது. இனிவரும் காலத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் அவசியமின்றி வீடுகளில் இருந்து வெளியே வருவதை தவிர்க்குமாறும், குறிப்பிட்ட நேர இடைவெளியில் மக்கள் தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.


Related Tags :
Next Story