புலியை தேடும் பணி மும்முரம்
முதுமலையில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலியை கும்கி யானைகள் உதவியுடன் தேடும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.
கூடலூர்,
முதுமலையில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய புலியை கும்கி யானைகள் உதவியுடன் தேடும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.
20 கேமராக்கள் பொருத்தம்
முதுமலை தெப்பக்காடு லைட்பாடி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பொம்மன் (வயது 33). இவர் முதுமலை வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டில் இருந்து வனப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென பொம்மன் மீது பாய்ந்தது. இதில் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
தொடர்ந்து புலியும் அங்கிருந்து ஓடியது. இதனிடையே பொம்மன் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புலி தாக்கிய சம்பவத்தால் முதுமலை ஆதிவாசி மக்களிடையே பீதி ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 2-வது நாளாக வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பதிவாகவில்லை
தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் புலி உருவம் பதிவு ஆகவில்லை. இருப்பினும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் ரோந்து சென்று புலியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆதிவாசி மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே தனியாக நடமாடக்கூடாது. இதேபோல் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் கவனமுடன் செல்ல வேண்டும்.
வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சம்பந்தப்பட்ட புலியை பிடிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் அதை அடையாளம் காணுவதற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட பகுதியில் தினமும் தேடுவதால் புலி மீண்டும் வர வாய்ப்பு இல்லை என்றனர்.