தேர்த்தங்கல் சரணாலயத்தில் அதிக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்தது


தேர்த்தங்கல் சரணாலயத்தில் அதிக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் கடந்த ஆண்டு பருமழை சரியாக பெய்யாததால் தண்ணீரின்றி பறவைகள் குறைந்த அளவிலேயே வந்தது. இதன் காரணமாக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் கடந்த ஆண்டு பருமழை சரியாக பெய்யாததால் தண்ணீரின்றி பறவைகள் குறைந்த அளவிலேயே வந்தது. இதன் காரணமாக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்துள்ளது.

தேர்த்தங்கல் சரணாலயம்

ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஏராளமான நாட்டு கருவேல மரங்களும், சீமை கருவேல மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.

இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உணவுக்காக இரையை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து கூடுகட்டி தங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் திரும்பி செல்வது வழக்கம்.

பறவைகள் வரவில்லை

இந்நிலையில் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் வரத்தால் ஓரளவு நீர் இருந்ததால் அதில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி தங்கியிருந்த பறவைகள் ஏமாற்றத்துடன் தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்றுவிட்டன.

இதன் காரணமாக தேர்த்தங்கல் சரணாலய பகுதி முழுவதும் எப்போதும் பறவைகளின் ரீங்காரமாகவே காணப்படும் நிலையில் பறவைகளின்றி கடும் நிசப்தமாகவே காட்சி அளித்தது, சரணாலய பகுதி முழுவதும் பறவைகள் இன்றி வெறும் மொட்டை மரங்களாகவே காட்சி அளித்தது, வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதாலும், வயல்வெளிகளில் பயிர்கள் கருகி விட்டதாலும் உணவுக்கு வழியின்றி அதிகமான பறவைகள் வரவில்லை.

சீசன் முடிவுக்கு வந்தது

பறவைகள் தங்களுக்கான இரை கிடைக்காத சூழ்நிலை காரணமாக திரும்பி சென்றிருக்கலாம் அல்லது வராமலேயே இருந்திருக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் மாவட்ட சரணாலயங்களில் வந்தபோது தேர்த்தங்கல் சரணாலயத்தில்தான் அதிக பறவைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மொத்தம் 7ஆயிரம் பறவைகள்தான் மாவட்டம் முழுவதும் வந்ததே மழையின்றி நீர்நிலைகள் வறண்டு கிடப்பதற்காக சான்றாக உள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் வழக்கமான அளவில் அதிக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்துள்ளது.


Next Story