கூவி கூவி சாராயம் விற்றவர் கைது
வாணியம்பாடியில் கூவி கூவி சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி காதர்பேட்டை மற்றும் நியூடெல்லி பகுதியில் சாராயம் கூவி கூவி விற்பதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடி கண்டுபிடித்தனர். கோணாமேடு பரமேஸ்வர் நகரை சேர்ந்த அன்புமணி (வயது 50) என்பதும், தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதும் தெரிய வந்தது.
விசாரணையில் அவர் சாராய பாக்கெட்டுகளை தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள ஆரிமானிபெண்டாவில் இருந்து எடுத்து வந்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே சாராய தயாரிப்பது, விற்பனை மற்றும் கடத்தல் குறித்த தகவல்களை அளிக்க தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 9159959919 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.