கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை சுத்தம் செய்த தொழிலாளி சாவு


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை சுத்தம் செய்த தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். அவருக்கு உரிய உபகரணம் வழங்கவில்லை என கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை சுத்தம் செய்த தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். அவருக்கு உரிய உபகரணம் வழங்கவில்லை என கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி வந்த கப்பல்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு ஸ்டார்க் என்ற கப்பல் வந்தது. இந்த கப்பலின் புரப்பல்லரில் மீன்பிடி வலை, கயிறு போன்றவை சிக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று புரப்பல்லரில் சிக்கும் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக தனியார் நிறுவனம் தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தை கப்பல் நிர்வாகத்தினர் அணுகி உள்ளனர்.

அந்த தனியார் நிறுவனத்தினர் டைவிங் பயிற்சி முடித்து உள்ள தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் சாம்ராஜ் (வயது 27) என்பவரை பணிக்காக அழைத்து சென்றனர்.

மூச்சுத்திணறி சாவு

சாம்ராஜ், கண்ணன் ஆகிய 2 பேர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடல் தண்ணீருக்குள் மூழ்கி சென்று கப்பல் புரப்பல்லரில் சிக்கி இருந்த வலை, கயிறு போன்றவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாம்ராஜ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இதகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் சாம்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக நேற்று காலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அருகே கொண்டு செல்லப்பட்டது. அப்போது, சாம்ராஜின் உறவினர்கள் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை அருகே திரண்டனர். அவர்கள் முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்காமலும், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததாலும் சாம்ராஜ் இறந்து உள்ளார் என்று குற்றம் சாட்டினர். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story