பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றகோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றகோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சுப்பிரமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், வருவாய் துறையினர் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இ்ந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கடையை திறக்க விடமாட்டோம் என தொடர்ந்து வலியுறுத்தினர்.
அப்போது டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.