ராமநாதபுரம் அருகே மொபட்டில் கொண்டுவந்து பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.9 கோடி
ராமநாதபுரம் அருகே மொபட்டில் கொண்டு வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.9 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அருகே மொபட்டில் கொண்டு வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.9 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கக்கட்டிகள்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள களிமண் குண்டு கடற்கரை சாலையில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மொபட்டில் தங்கக்கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், அதை கடத்தி வந்த மண்டபம் அம்பலக்காரர் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளை திருச்சி சுங்கத்துறை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன், இணை ஆணையர்கள் திலீபன், பிரதீப் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
கைதான நபரிடம் ராமநாதபுரம் சுங்கத்துறை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
ரூ.8.92 கோடி
இதுெதாடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
படகு மூலம் இலங்கையில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகளை களிமண் குண்டு கடற்கரையில் வைத்து ஒருவர் சல்மான்கானிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார். சல்மான்கான் அந்த தங்கக்கட்டிகளை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கொண்டு செல்ல இருந்தார். அந்த சாலையின் ஒரு இடத்தில் இன்னொருவர் வந்து தங்கக்கட்டிகளை வாங்கிக்கொள்வார் என சல்மான்கானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக சல்மான்கான் அணிந்து செல்லும் சட்டை, அவர் ஓட்டிச்சென்ற மொபட் எண் ஆகியவற்ைற வைத்து அந்த நபர் அடையாளம் கண்டு தங்கக்கட்டிகளை வாங்கிக்கொள்வார் என்று கூறி சல்மான்கானை கடத்தல்காரர் அனுப்பி உள்ளார். அவ்வாறு கொண்டு சென்றபோதுதான் சல்மான்கான் சிக்கி இருக்கிறார். ஆனால், தங்கக்கட்டிகளை வாங்க கிழக்கு கடற்கரை சாலையில் நிற்கும் நபர் யார்? என்று தனக்கு தெரியாது எனவும் சல்மான்கான் விசாரணையின்போது கூறியுள்ளார். அதே நேரத்தில் அவர் செல்போன் பயன்படுத்தவில்லை என தெரிகிறது. அவர் ஓட்டி வந்த மொபட் அவருடையது இல்லை எனவும் தெரியவந்திருக்கிறது. எனவே மொபட் யாருடையது என விசாரித்து வருகிறோம். இந்த கடத்தலில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால், அவர் தலைமறைவாக உள்ளார். விரைவில் அதுபற்றி துப்பு துலங்கும். மொத்தம் 47 தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை எடை போட்டதில் 14.87 கிலோ இருந்தது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.8.92 கோடி ஆகும்.
இவ்வாறு சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.