தாயின் உடலை சக்கர நாற்காலியில் மயானத்திற்கு கொண்டு வந்த மகன்
தகனம் செய்ய இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் மயானத்திற்கு மகன் கொண்டு வந்த சம்பவம் மனதை உருக்குவதாக இருந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 90). இவரது மனைவி ராஜேஸ்வரி(74). இவர்கள், தங்களது மகன் முருகானந்தத்துடன் வசித்து வந்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை முருகானந்தம் கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை ராஜேஸ்வரி இறந்து விட்டார்.
சக்கர நாற்காலியில் கொண்டு வந்தார்
வறுமை ஒருபுறம், அறியாமை மறுபுறம் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் முருகானந்தம் தவித்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூட எதுவும் சொல்லாமல், தனது தாயின் உடலை ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் வைத்து கட்டி, சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் உள்ள மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகன மேடை அமைந்துள்ள செவலூர் பிரிவு சாலைக்கு நேற்று அதிகாலையிலேயே எடுத்து சென்றுள்ளார்.
உடல் தகனம்
இறந்த மூதாட்டியின் உடல் சக்கர நாற்காலியில் அங்கு கொண்டு வரப்பட்டிருந்ததை கண்டு தகனமேடை பராமரிப்பாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு கொண்டு வர அரசின் பல்வேறு உதவிகள் உள்ள நிலையில் ஏன் இதுபோன்று சக்கர நாற்காலியில் உடலை கொண்டு வந்தீர்கள் என்று கேட்டபோது, தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன் என்று முருகானந்தம் கூறியுள்ளார். பின்னர் எரிவாயு தகன மேடை பணியாளர் உடலை பெற்றுக்கொண்டு, முறைப்படி இறுதி சடங்குகள் செய்து ராஜேஸ்வரியின் உடலை தகனம் செய்தார்.
அறியாமை மற்றும் வறுமையால் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.