பெற்ற தாய்க்கு உணவு தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டையும் இடித்த மகன்
திருப்பத்தூர் அருகே பெற்ற தாய்க்கு உணவு தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை இடித்த மகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் அருகே பெற்ற தாய்க்கு உணவு தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை இடித்த மகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள் (வயது 65). கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் கங்காதரன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பெங்களூருவில் உள்ளதால் சுந்தராம்பாள் கணவர் சம்பாதித்து கட்டிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தராம்பாள் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மகன் மீது புகார் மனு அளித்தார்.
அதில் அவர், எனது மகன் என்னை அடித்து துன்புறுத்தி சாப்பாடு வழங்காமல் கொடுமைப்படுத்துகிறார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த மகன் என்னை அடித்து துன்புறுத்தி அரசு கட்டிக்கொடுத்த கழிப்பறையை கடப்பாரையால் இடித்து உடைத்து விட்டான். தற்போது தங்குவதற்கு வழியில்லாமல் அக்கம் பக்கத்தினர் வீட்டில் வசித்து வருகிறேன். எனது வீட்டில் வாழ எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு
இதேபோல போலீஸ் சூப்பிரண்டிடமும், மனு அளிக்கப்பட்டது. பெற்ற தாயை காப்பாற்றாமல் அடித்து உதைப்பதாக கூறப்படும் சம்பவம் அந்த பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.