சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார் தொல் திருமாவளவன் பேச்சு


சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார்  தொல் திருமாவளவன் பேச்சு
x

சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார் ஆவார் என்று வடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.

கடலூர்

வடலூர்,

சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம் என்கிற தலைப்பில் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் வடலூர் பஸ் நிலையம் அருகே மாநாடு நடைபெற்றது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும் மாவட்ட கல்விக்குழுத்தலைவருமான வி.சிவக்குமார் தலைமை தாங்கினார்.

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

சனாதன கொள்கையை விதைக்க முடியாது

காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார் அங்கு சமூகநீதி கிடைக்கும் என எதிர்பார்த்தார், ஆனால், அங்கு கிடைக்காத காரணத்தால், சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.

அதுபோன்றுதான், வள்ளலார் கடவுள் மீது உள்ள ஈடுபாட்டால், முதல் 5 திருமுறைகளை எழுதினார். அதன்பின்னர் புதிய எழுச்சிபெற்று 6-ம் திருமுறையில், பழைய கருத்துகளை தூக்கி எரிந்து, புதிய கருத்துக்களை எழுதினார். 200 ஆண்டுகளுக்கு முன்பே பல புரட்சிகரமான கருத்துகளை கூறியவர் ஆவார்.

கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போகவேண்டுமென வள்ளலார் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணம் பலிக்காது. இந்த மண்ணில் சனாதன கொள்கையை விதைக்க முடியாது. சாதி, மதம், சமயமும் பொய் என்று தூக்கி எரிந்தவர் வள்ளலார் ஆவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரலாற்றை திாித்து கவர்னர் பேசுகிறார்

இதை தொடர்ந்து, விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

கவர்னர் ஆர்.என்.ரவி தினந்தோறும் புதிய சர்ச்சைகளை பேசி வருகிறார். அவர் பேசும்போது தமிழகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை வேண்டுமென்றே பேசி வருகிறார். திராவிடத்தையும், திராவிட இயக்க தலைவர்களையும் சீண்டி வருகிறார்.

தி.மு.க. எதிர்ப்பு என்கிற பெயரில் பெரியார் கொள்கையை வீழ்த்த வேண்டும் என்று பேசி வருகிறார். வரலாற்றை திரித்து பேசுவது, திரிபு வாதம் செய்வது அவரின் வாடிக்கை. அதன்படி தான் வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என பேசியுள்ளார்.

சனாதனத்தை எதிர்த்தவர்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், மனித உயிரையும் கடந்து அன்பு செலுத்தி உள்ளார். சாதி மதம், சமய சடங்குகளை எதிர்த்தவர் வள்ளலார். அந்த வகையில், சனாதனத்தையும் எதிர்த்தவர் வள்ளலார் ஆவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வக்கீல் அருள்மொழி, த.வா.க. மாவட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு தி.திருமால்வளவன், ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளர் சின்னா என்கிற சின்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்டு மாநில கட்டுப்பாட்டுக்குழு டி.மணிவாசகம் மற்றும் சன்மார்க்கஅன்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story