குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்
வந்தவாசியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி 21-வது வார்டு குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் வந்தவாசி நகரின் மேற்கு பகுதி தேரடி மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சன்னதி தெருவழியாகவும் சன்னதி பள்ளி பின்புறம் உள்ள பெரிய கால்வாய் வழியாகவும் வெளியேறுவது வழக்கம்.
சேவாநகரில் கமலாம்பாள் தெரு அமைந்துள்ளது. பெரிய கால்வாய் மூலம் வருகிற கழிவுநீர் கமலாம்பாள் தெருவை ஒட்டி குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலிமனைகளில் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களிடம் புகார் தெரிவித்தால் தற்காலிக நடவடிக்கை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, இந்த ஆண்டு மழைக்காலங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்காதவாறு கால்வாய் கட்டி முறையாக வெளியேறுவதற்கும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.