கனிம வளங்கள் கொண்டு செல்வதை மாநில அரசால் தடுக்க முடியாது
பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை மாநில அரசால் தடுக்க முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
பிற மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை மாநில அரசால் தடுக்க முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
அமைச்சர் பேட்டி
நாகர்கோவிலில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
எந்த ஒரு மேற்படிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரே தகுதி தேர்வு போதும் என கருணாநிதி அறிவித்தார். இதைத்தான் தி.மு.க. அரசு இன்றளவும் கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் கல்வியை மத்திய பட்டியலில் சேர்த்து விடக்கூடாது. மாநில அரசின் பட்டியலிலேயே இருக்க வேண்டும்.
மழுப்பலான பதில்
தமிழகத்தில் நீட் தேர்வு தேவையற்றது. இது மாணவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரையும் பறித்து வருகிறது. மணிப்பூர் கலவரம் மற்றும் இந்திய நாட்டின் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினால் மழுப்பலாக வெளிநாடுகளை பாருங்கள் என பிரதமர் மோடி கூறுகிறார்.
அநாகரிகத்தின் மொத்த வடிவாக பா.ஜ.க. திகழ்கிறது. சொகுசு பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சிப்பதோ, அவரை பற்றி பேசுவதற்கோ அருகதை இல்லை. கடமை, கண்ணியம், நாகரிகம் என அனைத்தையும் தி.மு.க.வினர் கடைபிடித்து வருகின்றனர்.
மாநில அரசால் தடுக்க முடியாது
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கனிம வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுக்கும் நடவடிக்கை மாநில அரசுக்கு இல்லை. இதனை தடுக்க மத்திய அரசு தான் முன்வர வேண்டும்.
சனாதனம் குறித்தும், செங்கோல் குறித்தும் எனக்கு கருத்துகள் கூற முழு உரிமை உள்ளது. இந்த கருத்தை சொல்ல எனக்கு உரிமை இல்லை என்றால், இது அவர்களது அறியாமை.
இவ்வாறு அவர் கூறினார்.