மாநில திட்டக்குழு ஆய்வுக்கூட்டம் முதல்-அமைச்சர் தலைமையில் நடந்தது


மாநில திட்டக்குழு ஆய்வுக்கூட்டம் முதல்-அமைச்சர் தலைமையில் நடந்தது
x

மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக்குழு புதிய கொள்கைகளை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மாநில திட்டக்குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய 10 கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், முதல்-அமைச்சரும், தமிழ்நாடு மாநில திட்டக்குழுத்தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விவாதம்

தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகளில், பணி முடிவுற்ற நிலையில் உள்ள 3 கொள்கைகளான, தொழில் மயமாதல், மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா; தமிழ்நாடு சுகாதார நலக்கொள்கை; திருநர் நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து முதல்-அமைச்சரிடம் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இக்கொள்கைகளை செயல்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம் கபூர் ஆகியோர் இக்கொள்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். தொழில் மயமாதல் கொள்கை குறித்து தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், தமிழ்நாடு மருத்துவ கொள்கை குறித்து டாக்டர் அமலோற்பவநாதன், திருநர் நலக்கொள்கை குறித்து நர்த்தகி நட்ராஜ் ஆகியோர் விவரித்தனர்.

பங்கேற்றோர்

கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, குழு உறுப்பினர்களான பேராசிரியர்கள் ராம.சீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மு.தீனபந்து, டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., சித்த மருத்துவர் கு.சிவராமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் பி.செந்தில்குமார்,

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் பி.சந்தரமோகன், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலாளர் த.சு.ராஜசேகர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மின்வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் தொழில் மயமாதல் கொள்கை அறிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஜெ.ஜெயரஞ்சன், டி.ஆர்.பி.ராஜா, ம.விஜயபாஸ்கர், மல்லிகா சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story