பீடத்தை உடைத்து பாரத மாதா சிலை அகற்றம்
விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்த பாரத மாதா சிலையை நள்ளிரவில் போலீசார் திடீரென அகற்றி லாரியில் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்த பாரத மாதா சிலையை நள்ளிரவில் போலீசார் திடீரென அகற்றி லாரியில் எடுத்துச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரத மாதா சிலை
விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று (புதன்கிழமை) பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
இதையொட்டி விருதுநகரில், சாத்தூர் ரோடு சந்திப்பில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் 5 அடி உயர பாரத மாதா கற்சிலை வைக்கப்பட்டது.
போலீசார் அனுமதியின்றி சிலை வைத்ததாகவும், அந்த சிலையை அகற்றுமாறும் அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது..
எழுத்துப்பூர்வ கடிதம்
இந்தநிலையில், பா.ஜனதா நிர்வாகிகள் அலுவலக வளாகத்தை பூட்டிவிட்டு இரவில் சென்று விட்டனர். காவலாளி மற்றும் 2 தொண்டர்கள் மட்டுமே இருந்தனர்.
நள்ளிரவில் விருதுநகர் கூடுதல் சூப்பிரண்டு அசோகன், அருப்புக்கோட்டை உதவி சூப்பிரண்டு காருன் காரட் ஆகியோர் தலைமையில் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர்.
அங்கிருந்த தொண்டர்களிடம் கதவை திறக்குமாறு கூறியபோது அவர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் கதவை திறப்பதாக தெரிவித்தனர்.
சிலை அகற்றம்
இதனை தொடர்ந்து போலீஸ்காரர்களில் சிலர், பா.ஜனதா அலுவலகத்தின் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று கதவை திறந்தனர்.
இதனை தொடர்ந்து பாரத மாதா சிலையை பீடத்திலிருந்து கடப்பாரையால் இடித்து அகற்றினர்.
சிலையை முழுவதுமாக மூடி மினி லாரியில் ஏற்றி, விருதுநகர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் கோஷமிட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலக வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.