வைக்கோல் படப்புகளில் தீப்பிடித்தது
ஆயக்குடியில் வைக்கோல் படப்புகளில் தீப்பிடித்தது. அதனை தீயணைப்பு படையினர் போராடி அணைத்தனர்.
வைக்கோல் படப்பில் தீ
பழனியை அடுத்த புதுஆயக்குடியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது 65). இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். மாடுகளின் தீவனத்துக்காக வீட்டின் அருகே கொட்டகை அமைத்து அதில் வைக்கோல் படப்பு வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் படப்பு பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. இதை கண்டதும் மயிலாத்தாள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.
எரிந்து நாசம்
ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென கொட்டகை முழுவதும் பரவியது. மேலும் அருகே உள்ள செல்வதுரை என்பவரது வைக்கோல் படப்பிலும் தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கொட்டகை மற்றும் அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து தீயணைப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காற்றின் வேகம்
விபத்து குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கூறும்போது, காற்று காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் வீட்டின் அருகிலோ, தோட்ட பகுதிகளிலோ குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் எளிதில் மற்ற இடங்களுக்கு தீ பரவ நேரிடும். அதேபோல் புகைப்பிடிப்பவர்கள் முழுமையாக அணைத்த பின் பீடி, சிகரெட்டை கீழே போட வேண்டும். மேலும் மின் வயர்களும் தாழ்வாக ஒன்றோடு ஒன்று உரசுபோல் இருந்தால் அதையும் சரிசெய்ய வேண்டும் என்றார்.