புளியங்குடியில் பொதுமக்களை விரட்டி கடித்த தெரு நாய்; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
புளியங்குடியில் தெரு நாய் ஒன்று பொதுமக்களை விரட்டி கடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
புளியங்குடி:
புளியங்குடியில் நேற்று காலை பொதுமக்கள் வழக்கம்போல வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தனர். பள்ளி குழந்தைகள், வேலைக்குச் செல்பவர்கள் என பரபரப்பாக காணப்பட்டது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நாய், ரோட்டில் சென்றவர்களை விரட்டி விரட்டி தாறுமாறாக கடிக்க ஆரம்பித்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், முதியோர்கள் என அனைவரும் நாய்க்கு பயந்து அங்குமிங்கும் தப்பி ஓடினர். இருந்தபோதிலும் நாயின் கடிக்கு பலபேர் தப்பவில்லை.
புளியங்குடி மெயின் ரோடு, ஜின்னா நகர், அருந்ததியர் தெரு, மேல்மந்தைப்பகுதி, ஊரணி, ஜின்னா நகர், வீரப்ப சாமி கோவில் தெரு, முத்துராமலிங்கம் தெரு என ஒவ்வொரு வீதியாக ஓடிச்சென்று அந்தந்த தெருக்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் நாய் கடித்து குதறியது.
இதில் செம்பியம்மாள் (வயது 80), மைதீன் (52), ராமகிருஷ்ணன் (59) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் புளியங்குடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்களை கடித்து வரும் தெரு நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. கட்சியினர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி நகரசபை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.