இடஒதுக்கீடு கோரி போராட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம்
தக்கலை,
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை குஜராத், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை.
எனவே இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தி முற்பட்ட வகுப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட நாயர் சமுதாயத்தின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் சடையப்பன் நாயர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அம்சி மது வரவேற்று பேசினார். செயலாளர் கிருஷ்ணபிரசாத் போராட்டம் குறித்து விளக்கினார்.
இந்த போராட்டத்தை ஆதரித்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் பிரேம்குமார், பாலூர் ஊராட்சி தலைவர் அஜித்குமார் உள்பட பலர் பேசினர்.
இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் ஹரீஷ்குமார் நன்றி கூறினார்.