கிராமமக்கள் சேரும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே கிராமமக்கள் சேரும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே வாறுகால் அமைக்கவும், சாலையை புதுப்பிக்கவும் கோரி கிராம மக்கள் சேரும் சகதியுமாக கிடந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் கழிவுநீர் தேக்கம்
ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை பஞ்சாயத்தை சேர்ந்த வடக்குகைலாசபுரம் கிராமம். இந்த கிராமத்தில் போதிய வாறுகால் வசதி இல்லை என்பதால் கழிவு நீர் வெளியே செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி சுகாதார கேடு பரவி வருகிறது.
எனவே, கிராமத்தில் வாறுகால் மற்றும் புதிய சாலை அமைக்க வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலைகளில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி சுகாதார கேடாக காட்சியளிக்கிறது. மேலும் சாலைகளில் கிராம மக்கள் நடமாட முடியாமலும், வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாற்றுநடும் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் கிராமத்தின் முக்கிய சாலையில் கூடினர். சேரும், சகதியுமாக காட்சியளித்த அந்த சாலைக்கு வயல்வெளியில் இருந்து நெல் நாற்றுக்கட்டுகளை கொண்டு வந்தனர். சாலைஓரத்தில் தேங்காய் பழம் வைத்து நெல் நாற்றுக்க்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், சாலையில் நெல்நாற்றை நட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையை புதுப்பிக்கவும், கழிவுநீர் வெளியேற வாறுகால் வசதியை ஏற்படுத்தி தரக்கோரியும் கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.