முத்துநாயக்கன்பட்டியில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்-அருள் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு பூட்டு போடும் ேபாராட்டம் நடைபெற்றது.

சேலம்

ஓமலூர்:

டாஸ்மாக் மதுக்கடை

ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடை ஊரின் மையப்பகுதியில் உள்ளதுடன், மதுக்கடையின் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, சிறுவர் பூங்கா, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் பள்ளி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

எனவே இந்த மதுக்கடையை அகற்றக்கோரி முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள், அருள் எம்.எல்.ஏ. தலைமையில் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் போலீஸ் அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையொட்டி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஓமலூர் துணை சூப்பிரண்டு சங்கீதா உள்ளிட்ட 6 துணை சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் முத்துநாயக்கன்பட்டியில் நேற்று காலை குவிக்கப்பட்டனர். மேலும் சேலம்- முத்துநாயக்கன்பட்டி ரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டம்

இதனிடையே அருள் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ம.க.வினர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானோர் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக முத்துநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தனர். அங்கு மதுக்கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில பசுமை தாயகம் இணை செயலாளர் சத்ரியசேகர், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாரதா ராஜா, செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், பா.ம.க. மாவட்ட அமைப்பு தலைவர் சரவண கந்தன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம், ஒன்றியசெயலாளர் காமராஜ், ஒன்றிய தலைவர் சம்பத், மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் ஜே.ம.சுமன், கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் சக்தி, நிர்வாகிகள் ஆறுமுகம், வெங்கடேஷ், ஜெயவேல், கவிதா, உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

தடுத்து நிறுத்தம்

பின்னர் அவர்கள் சங்கிலியுடன் கோர்க்கப்பட்ட பூட்டை எடுத்துக்கொண்டு, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி மற்றும் ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன், மண்டல டாஸ்மாக் மேலாளர் குப்புசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுபான கடையை 3 மாதத்தில் வேறு இடத்தில் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள கிராம மக்கள் மறுத்தனர். இதையடுத்து ஒரு மாதத்தில் வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்வதாக தெரிவித்தனர். இதனை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கும்படி அருள் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து டாஸ்மாக் மண்டல மேலாளர் குப்புசாமி ஒரு மாத காலத்தில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். பின்னர் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story