'காலிங்' பெல்லை அழுத்தியபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலி
‘காலிங்’ பெல்லை அழுத்தியபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலி
'காலிங்' பெல்லை அழுத்தியபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலியானான்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மாணவன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளத்தூர் கிராமம் பாமந்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ரவி. விவசாயி. இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகன் அஸ்வின்(வயது 14). இவன், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று அதே தெருவில் உள்ள அவனது உறவினர் வீட்டில் அஸ்வின் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் காலிங்பெல்லை அழுத்தி உள்ளான்.
மின்சாரம் தாக்கி சாவு
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அஸ்வினை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
சோகம்
இதுகுறித்து ரவி ெகாடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலிங்பெல்லை அழுத்திய போது மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது