துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள்


துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. இதனால் துள்ளிக்குதித்து மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. இதனால் துள்ளிக்குதித்து மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 6-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 7-ந் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று வரை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 3,685 மாணவர்கள் மற்றும் 3,726 மாணவிகள் என மொத்தம் 7,411 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். கடைசி நாளான நேற்று சமூக அறிவியல் தேர்வில் 7,079 பேர் கலந்து கொண்டனர். 319 பேர் தேர்வு எழுதவில்லை.

இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்கள் 190 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 177 பேர் கலந்து கொண்டனர். 13 பேர் வரவில்லை.

மகிழ்ச்சி

இதற்காக 59 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வு பணியில் 62 முதன்மை கண்காணிப்பாளர்கள், 62 துறை அலுவலர்கள், 140 அலுவலக பணியாளர்கள், 625 அறை கண்காணிப்பாளர்கள், 23 வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் என 912 பேர் ஈடுபட்டு இருந்தனர். இதேபோன்று மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 88 பேர் அடங்கிய பறக்கும் படை குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடைசி நாள் தேர்வு நேற்றுடன் முடிந்தது. இதனால் தேர்வு எழுதிவிட்டு தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த மாணவர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து விடை பெற்று கொண்டனர். மேலும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தவிர 'செல்பி' எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.

அதிக மதிப்பெண்

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தேர்வு நாங்கள் பயந்த அளவுக்கு கடினமாக இல்லை. தமிழ் உள்ளிட்ட பெரும்பாலான தேர்வுகள் எளிதாகவே இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும். இதன் மூலம் பிளஸ்-1 வகுப்பில் பிடித்த பாடப்பிரிவுகளில் சேர உள்ளோம். அதற்கு முன்னதாக கோடை விடுமுறை மகிழ்ச்சியாக கழிக்க போகிறோம் என்றனர்.


Next Story