காதலித்து திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
காதலித்து திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் குத்தாலிங்கம் (வயது 27). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவம்மாள் (24). இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
இவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருகுடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 2 பேரும் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி, தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கரிடம் அழைத்து சென்று இதுகுறித்து கூறினார். பின்னர் இருவீட்டாரையும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில் பெண் வீட்டார் வரவில்லை. 2 பேரும் திருமண வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.