கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து விரைவில் முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்
கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து விரைவில் முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும்
கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து விரைவில் முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும் என பாலகிருஷ்ணன் கூறினார்.
போராட்டத்துக்கு ஆதரவு
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கடந்த 26 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை பழைய நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் ரூ.150 கோடிக்கு மேல் வங்கியில் கடனை வாங்கி பயன்படுத்திவிட்டு தற்போது ஆலை நிர்வாகம் திவால் ஆகிவிட்டதால் ஏலத்தில் வேறொரு நிர்வாகம் ஆலையை எடுத்துள்ளது. புதிதாக வந்துள்ள நிர்வாகம் அந்த கடனுக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறி, விவசாயிகளை கடனாளியாக மாற்றி நடுத்தெருவில் நிறுத்தி வைத்துள்ளனர்.
முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு
எனவே தமிழக அரசு பழைய ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் அல்லது புதிய நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மோசடியாக விவசாயிகளின் பெயரில் கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து விரைவில் முதல்-அமைச்சரிடம் பேசி தீர்வு காணப்படும். வங்கிகளில் இருந்து எந்தவித நோட்டீஸ்களும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. வேறு ஒரு வங்கியில் விவசாயிகள் கடன் கேட்டால் ஏற்கனவே கடன் இருப்பதாக கூறி மறுக்கக்கூடாது. விவசாயிகளுக்கு தடை இல்லா சான்று அரசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரவு பகலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.