கொடைக்கானலில் மாரத்தான் போட்டியுடன் கோடை விழா நிறைவு


தினத்தந்தி 3 Jun 2023 2:30 AM IST (Updated: 3 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் 8 நாட்களாக நடைபெற்று வந்த கோடை விழா, மாரத்தான் போட்டியுடன் நேற்று நிறைவு பெற்றது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் 8 நாட்களாக நடைபெற்று வந்த கோடை விழா, மாரத்தான் போட்டியுடன் நேற்று நிறைவு பெற்றது.

கொடை விழா

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொடை விழா மற்றும் மலர் கண்காட்சி 8 நாட்கள் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது.

கொடை விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகள், படகு போட்டி, படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, பானை உடைக்கும் போட்டி, மீன் பிடித்தல் போட்டி ஆகியவையும் நடைபெற்றன. இதில், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஒவ்வொரு போட்டிகளின் முடிவிலும் வெற்றிபெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாரத்தான் போட்டி

இந்தநிலையில் கோடை விழா நிறைவு நாளான நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டி நட்சத்திர ஏரியை சுற்றியுள்ள சாலையில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.

இதில், ஆண்கள் பிரிவில் கபிலன் என்பவரும், பெண்கள் பிரிவில் நேகா என்பவரும் முதலிடம் பிடித்தனர். பின்னர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கோடை விழா நிறைவு விழா ஆகியவை பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார். இதில், கொடைக்கானல் ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். அதேபோல் நன்கொடையாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

மழையுடன் நிறைவு

இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுலா அலுவலர்கள் சுதா, பெரியசாமி, காமராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் அன்பரசன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நிறைவு விழா முடிவடைந்த சிறிது நேரத்தில், மாலை 5 மணிக்கு கொடைக்கானலில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்மூலம் மகிழ்ச்சி மழையுடன் விழா நிறைவடைந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story