விழுப்புரத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் விழுப்புரத்தில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் கடந்து சுட்டெரித்தது. அதேபோல் விழுப்புரத்திலும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெயிலுக்கு அஞ்சி பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
104 டிகிரி பதிவு
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 28-ந் தேதியுடன் முடிவடைந்தது. என்றாலும் இன்னமும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கடந்த 2 நாட்களாக 100 டிகிரியையும் தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த சூழலில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரத்தில் நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இயல்பை விட அதிகமாக சுட்டெரித்த வெயில் 104 டிகிரியாக பதிவானது.
பொதுமக்கள் அவதி
பொதுமக்கள், வெப்பத்தின் தாக்கத்தினால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுபோல் அத்தியாவசிய தேவைக்காகவும், பணி நிமித்தமாகவும் வெளியே வரும் பொதுமக்கள் வெப்பத்தின் உக்கிரத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.