மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

பள்ளிகொண்டா அருகே மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார்.

வேலூர்

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள மைதானத்தில் வருகிற 11-ந்் தேதி பா.ஜ.க. சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, வி.கே.சிங், முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்க இருக்கின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தற்போது மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை நேற்று மாலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வெளியூர் நபர்களுக்கு தடை

அப்போது மேடையின் பின்பக்கம் சவுக்கு கட்டைகளால் யாரும் உள்ளே நுழையாதபடி பேரிகார்டுகள் அமைக்க வேண்டும். அருகில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தவிர வேறு யாரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தங்க அனுமதிக்கக்கூடாது. தற்போது உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து வைக்க வேண்டும், 24 மணிநேரமும் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

பள்ளிகொண்டா பா.ஜ.க. நிர்வாகி சுகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story