கச்சிரான்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
ஆலங்குடியில் நீர் ஆதாரமாக விளங்கி வந்த கச்சிரான்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சிரான்குளம்
ஆலங்குடி அருகே மேலவிடுதிக்கும் மூக்கம்பட்டிக்கும் இடையே உள்ளது கச்சிரான்குளம். அதிக அளவு மழை பெய்யும் போது இக்குளத்தில் தண்ணீர் தழும்பி இருக்கும். இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் முப்பருவம் விவசாயம் செய்து வந்தனர். இந்த குளத்தில் தண்ணீர் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.
கிணறு மற்றும் ஆழ்குழாய் கிண றுகளிலும் தண்ணீர் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் இக்குளத்தை சுற்றியுள்ள மேலவிடுதி, மூக்கம்பட்டி, மாத்தூர், நரியன்கொல்லை, வாடிமனைப்பட்டி உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சமே இல்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தூர்வாரப்படாமல் உள்ளது
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இல்லாமல் பொய்த்து போனதால் அக்குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில் சிறிய கண்மாய்கள், குளங்களை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஒரு சில கண்மாய்களும், கிராம பகுதிகளில் உள்ள சிறிய கண்மாய்களும், குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டுள்ளன.
இருப்பினும் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பெரிய பாசன குளங்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தூர் வாரப்படாமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான சிறிய கண்மாய்களும், குளங்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் போதுமான மழை நீரை சேகரித்து வைக்க முடியவில்லை. இது தவிர பல குளங்களில் தடுப்பு சுவர்கள் இல்லாததால் சேகரிக்கப்பட்ட மழை நீரும் பயனில்லாமல் வீணாகி வருகிறது.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவு
இந்நிலையில் கடந்த மாதம் கூட வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வனத்துறை மற்றும் வனப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும். இது தொடர்பான டெண்டர் நடைமுறைகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விவசாயிகள் அவதி
இந்நிலையில் மேலவிடுதிக்கும், மூக்கம்பட்டிக்கும் இடையே 10 ஏக்கரில் உள்ள கச்சிரான்குளம் தண்ணீர் இன்றி சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது. தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடந்த சில மாதங்களாக அவ்வப் போது மழை பெய்தும் இக்குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டு உள்ளது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்றது. இதனால் விவசாய கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வற்ற தொடங்கியுள்ளன. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கூறினர்.