சிறையில் தண்டனை கைதியாக இருந்த தாசில்தார் திடீர் சாவு


சிறையில் தண்டனை கைதியாக இருந்த தாசில்தார் திடீர் சாவு
x

லஞ்ச வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் தண்டனை கைதியாக இருந்த தாசில்தார் திடீரென்று இறந்தார்.

திருநெல்வேலி

தென்காசி அருகே மேலகரம் என்.ஜி.ஓ. காலனி 8-வது தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 68). இவர் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றியபோது, லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீதான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து நெல்லை கோர்ட்டில் அருணாசலத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஐகோர்ட்டும் அவரது தண்டனையை உறுதி செய்ததால், கடந்த மாதம் அருணாசலம் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவில் சிறையில் அருணாசலத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மூச்சுத்திணறலாலும், நெஞ்சுவலியாலும் பாதிக்கப்பட்ட அருணாசலம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறையில் இருந்த தண்டனை கைதி இறந்ததால், அவரது இறப்பு குறித்து நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story