தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலை அதிராம்பட்டினத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலை அதிராம்பட்டினத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்:
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலை அதிராம்பட்டினத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில் சேவை
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று 8-ந் தேதி சென்னை வந்திருந்தார். இதன் ஒரு பகுதியாக தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர விரைவு ரெயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் இன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் நாளை (திங்கட்கிழமை) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும். இந்த ரெயில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் ஏமாற்றம்
அதிராம்பட்டினம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த காரைக்குடி- சென்னை விரைவு ரெயில் தினசரி இயக்குவதில் காலதாமதம் ஆகுவதால், தாம்பரம்-செங்கோட்டை வரைவு ரெயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.ஆனால் இந்த ரெயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்காதது பயணிகளிடையே ஏமாற்றம் அளித்துள்ளது.
அதிராம்பட்டினத்தில் சென்னைக்கு தினமும் அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர். அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் செகந்திராபாத் விரைவு ரெயில் நின்று சென்று வருகிறது. இதில் அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு ரெயிலில் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
அதிராம்பட்டினத்தில் நின்று செல்லுமா?
தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில் அதிராம்பட்டினத்தில் நின்று சென்றால் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே செகந்திராபாத் விரைவு ரெயில் நின்று செல்வது போல் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயிலும் அதிராம்பட்டினத்தில் நின்று செல்லுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.