காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்


காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும்
x

வருகிற 11-ந் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் என மணியரசன் கூறினார்.

தஞ்சாவூர்


வருகிற 11-ந் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும் என மணியரசன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பெ.மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புறக்கணிக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் சட்டத்தை கடைபிடிக்காமல் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகள் கொண்ட புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி காலத்தில்தான் கர்நாடகாவில் ஹேமாவதி, ஹேரங்கி போன்ற அணைகள் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அதேபோல் தற்போது கர்நாடக அரசு மீண்டும் மேகதாதுவில் அணை கட்டி தமிழகத்துக்கு உபரியாக செல்லக்கூடிய தண்ணீரையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்து வேலையை தொடங்கி உள்ளது. இதை தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகிவிடும். கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக அரசையும், கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்காத மத்திய அரசையும் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மனுக்கள் அளிக்க இருக்கிறோம் வருகிற 22-ந் தேதி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஒத்த கருத்துடைய கட்சிகளையும், காவிரி உரிமை மீட்பு குழு போன்ற பொதுவான அமைப்புகளையும் தமிழக அரசு ஒன்றிணைத்து கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story