மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடையாக உள்ள மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடையாக உள்ள மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
பொதுக்கூட்டம்
மயிலாடுதுறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு அலுவலக கட்டிட நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கவர்னருக்கு எதிராக தொடர் போராட்டம்
பி.பி.சி. நிறுவனம் உலகம் முழுக்க நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மிகச்சிறந்த சிந்தனையாளர் காரல்மார்க்ஸ் என அறிவித்துள்ளது. ஆனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அது குறித்தெல்லாம் ஒன்றும் தெரியாது.
மார்க்சையும், மார்க்சியத்தையும் இழிவுபடுத்திய கவர்னர் ரவிக்கு எதிராக அவர் செல்லும் இடமெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம், தொடர்ந்து நடத்துவோம்.
உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடம்
ஹிட்டண்பர்க் நிறுவனம் 2 ஆண்டுகள் தொடர்ந்து அதானி பற்றி ஆய்வு நடத்தி 81 கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் ஒரு கேள்விக்குக்கூட அதானியிடம் இருந்து பதில் இல்லை. நாட்டை கொள்ளையடிக்கவும், அதானிக்கு உதவி செய்யவும்தான் மோடி அரசு இருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமராவதற்கு முன்பு வரை அதானியின் சொத்து மதிப்பு ரூ.56 ஆயிரம் கோடி ஆகும். உலக பணக்காரர்கள் வரிசையில் 600 இடத்திற்கும் அப்பால் இருந்தவர் தற்போது 3-வது இடத்திற்கு வந்து விட்டார்.
மேல்முறையீடு செய்ய வேண்டும்
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் சட்டத்தில் உள்ள ஷரத்துக்களையும், விழுமியங்களையும் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்க முயற்சித்து வருகிறது. தந்தை பெரியார் சொன்ன முழக்கமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற முழக்கத்தை முதன் முதலில் அமலாக்கியது மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள அரசாங்கம்தான் என்பதை பெருமையாக சொல்கிறோம்.
எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடையாக உள்ள மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கான ரூ.17 லட்சம் நிதியை கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். முடிவில் நகர செயலாளர் விஜய் நன்றி கூறினார்.