டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்


டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்
x

டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சேலம்

சங்ககிரி:-

சங்ககிரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க 48-வது மகாசபை கூட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் குமாரசாமி, பொருளாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் மோகன் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் பொதுச்செயலாளர் சண்முகப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடி குறித்து மத்திய மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்களில் டீசல் விலையை குறைத்து உள்ளனர். ஆனால் தமிழ்நாடு போன்ற மாநில கட்சி ஆளும் மாநிலங்களில் டீசல் விலையை குறைக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல டீசல் விலையை குறைக்க வேண்டும். லாரிகளில் 11 கம்பெனிகளின் ஒளிரும் பட்டை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கம்பெனிகளின் ஒளிரும் பட்டையை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே 11 கம்பெனிகளுக்கு ஒளிரும் பட்டையை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க செயலாளர் குமார், திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கணேசன், ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க இணை செயலாளர் முருகேசன், உப தலைவர் சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் செங்குட்டுவேலு நன்றி கூறினார்.


Next Story