தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்தமிழ்புலிகள் கட்சியினர்மனு கொடுக்கும் போராட்டம்


தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்தமிழ்புலிகள் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், அருந்ததியர் மக்களை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் தாசு தலைமை தாங்கினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கத்தார் பாலு, கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் முனியம்மாள், தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ சரவணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அருந்ததியர் மக்களை ஆந்திராவில் இருந்து துப்புரவு பணிக்காக வந்தவர்கள் என்றும், அவர்களை வந்தேறிகள் என்றும், சாதி பிரிவினைவாத கருத்துக்களை பேசி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ஊர்க்காவலன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அருந்ததியர் மக்களை அவதூறாகவும், இழிவுபடுத்தியும் பேசி உள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பஸ் வசதி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாவட்ட தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர் சுலைமான், கொங்கராயகுறிச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை தலைவர் ரகுமத்துல்லா, கிளைச் செயலாளர் சுகுணா மன்சூர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் இருந்து கொங்கராயகுறிச்சி வழியாக ஏற்கனவே நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் அந்த பஸ்களை சீராக இயக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story