திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 லட்சம் செடிகள் நடவு செய்ய இலக்கு
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 லட்சம் செடிகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 லட்சம் செடிகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
விதைகளை தூவி...
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 43 வகையிலான 27 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா விதைகளை தூவி தொடங்கி வைத்தார். மேலும் ஏற்கனவே 22 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் அமர்குஷ்வாஹா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் என்னுடைய சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் 22 ஆயிரம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பு இச்செடிகள் 2 முதல் 3 அடிகள் வளர்ந்து விடும். அதற்கு பிறகு 30 ஆயிரம் மரகன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இலவசமாக வழங்கி நடவு செய்யப்படும்.
15 லட்சம் செடிகள் நடவு செய்ய இலக்கு
மேலும் மஞ்ச நத்தி, குமிழ் தேக்கு, கசக்கா, சீத்தா, கருங்காலி, பூவரசன், இலைபுரசு உள்ளிட்ட 43 வகையான 27 ஆயிரம் செடிகள் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 15 லட்சம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை தமிழக அரசு ஏற்படுத்தவுள்ளது. அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் உதவும் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 25 ஆயிரம் விதை நாற்றுகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா விதைகளை தூவி பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.