சேலம் மாவட்டத்தில் 3,655 டன் துவரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் 3,655 டன் துவரை உற்பத்தி செய்ய இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. இதில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
2022-23-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் வகையில் துவரை உற்பத்தியை அதிகரிக்க கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை கொண்டு துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவரை சாகுபடி
இதன் அடிப்படையில், நடப்பாண்டில் சேலம் மாவட்டத்திற்கு 2,500 ஹெக்ேடர் துவரை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் 3,655 டன் துவரை உற்பத்தி ெசய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் துவரை குழு தொகுப்புகளை உருவாக்கி அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களில் விதைகள் மற்றும் முக்கிய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
துவரையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அட்மா திட்டம் மூலம் மின்னணு விளம்பரம், கிராம பிரசாரங்கள், விவசாயிகளுக்கான பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சி போன்றவற்றை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் துவரையின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் விவசாயிகளின் நலனுக்கென செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
செயல் விளக்கம்
முன்னதாக வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் துவரை சாகுபடி மற்றும் மா அடர் நடவு சாகுபடி குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.