விவசாயிகளுக்கு ரூ.440 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு
குமரி மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.440 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.440 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன் கூறினார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி, பொதுப்பணித்துறை அதிகாரி (நீர்வள ஆதார அமைப்பு) வசந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜான் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தரப்பில் பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, விஜி, செண்பகசேகர பிள்ளை, தங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.440 கோடி இலக்கு
கூட்டம் தொடங்கியதும் குமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் உரங்களின் இருப்பு குறித்து பட்டியலிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்க ரூ.400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ரூ.393 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த ஆண்டுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.440 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கடன் கேட்பவர்களுக்கும் வழங்கப்படும்.
யூரியா உரம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் காம்ப்ளக்ஸ் உரம், யூரியா, டி.ஏ.பி. உரம் உள்ளிட்ட உரங்கள் மொத்தம் 1886 டன் இருப்பில் உள்ளன. யூரியா உரம் மட்டும் 170 டன் இருப்பு உள்ளது. சில கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா உரம் இல்லாமல் இருக்கிறது. அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் தேவை இருப்பின், தற்காலிக தேவையை சமாளிக்க யூரியா உரம் அனுப்பி வைக்கப்படும். விரைவில் நமது மாவட்டத்துக்கு தேவையான உரம் வந்துசேரும். அப்போது தேவைக்கேற்ப விவசாயிகள் உரம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
உரம் தட்டுப்பாடு
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
நெல் சாகுபடி தொடங்கும் நேரமான தற்போதுதான் யூரியா உரம் விவசாயிகளுக்கு தேவைப்படும். எனவே தேவையான நேரத்தில் யூரியா உரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்து மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர் சேதத்துக்கான காப்பீடு பணம் இன்னும் கிடைக்கவில்லை.
வனவிலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் பயிர்களுக்கு காப்பீடுத் தொகை பெறலாம் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதுதொடர்பாக எந்த ஆணையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக அரசுக்கு வலியுறுத்த வேண்டும். வாழை, தேங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தேர்தல்
பட்டணங்கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட 630 குளங்களில் தூர்வார அரசிதழில் வெளியிட்டதைப்போன்று, பேரூராட்சி, ஊராட்சி குளங்களையும் அரசிதழில் வெளியிட வேண்டும். குளங்கள் தூர்வாருவதற்கு கிராம நிர்வாக அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும்,
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-
மீன்பாசி குத்தகை
நெல் விவசாயிகளுக்கு தற்போது யூரியா உரம் தேவையாக இருக்கிறது. இந்த நேரத்தில் கொடுத்தால்தான் அவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே உரம் இருப்பு வைக்காத சங்கங்களை கண்டறிந்து உடனடியாக உரம் இருப்பு வைக்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதும் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல் நடத்தப்படும். மீன்பாசி குத்தகைக்கு ஏலம் விடப்படும். மேலும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
முன்னதாக மறைந்த மூத்த விவசாயி மருங்கூர் செல்லப்பா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.