வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை நூறு சதவீதம் முடித்த 26 பணியாளர்களுக்கு பாராட்டு


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை  நூறு சதவீதம் முடித்த   26 பணியாளர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை நூறு சதவீதம் முடித்த 26 பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த 26 பணியாளர்களை கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்விஉதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் 366 மனுக்களை கொடுத்தனர்.

பாராட்டு

கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியின் போது இறந்த அர்ச்சுனன் என்பவரின் மனைவி மணித்தாய் என்பவருக்கு கருணை அடிப்படையில் இரவு காவலர் பணி நியமன ஆணையும், பேரூரணி கிராமத்தில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த விளாத்திகுளம் தொகுதியை சேர்ந்த 20 பணியாளர்கள் மற்றும் திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த 6 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணைஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story