பாட புத்தகங்கள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் வழங்க வசதியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் வழங்க வசதியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜூன் மாதம் திறப்பு
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவு பெற்றது. இதனைதொடா்ந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் உள்ள அந்தந்த வினியோக மையங்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாட புத்தகங்கள் வினியோகம்
குமரி மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகம் ஏற்கனவே புத்தகங்கள் வினியோக மையங்களில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பள்ளிகள் திறக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது.
இதற்காக மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பாட புத்தகங்கள் வாகனங்கள் மூலம் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடைகள், புத்தக பை, காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரண பெட்டி உள்ளிட்ட உபகரணங்களையும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.