டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை,
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகரசபை தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரவீந்திரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-
நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி:- நகரின் பல இடங்களில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. அவற்றை மீட்க வேண்டும்.
தலைவர் : நீர்நிலைகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வு காணப்படும்.
டாஸ்மாக் கடை
ராம திலகவதி:- எங்கள் பகுதிக்கு சுகாதார வளாகம், மினி பவர் பம்ப், தங்கச்சாலை தெரு பகுதியில் பாலம் அமைக்க பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தலைவர்:- அப்பகுதியில் சுகாதார வளாகம் கட்ட எம்.பி.யிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி வந்தவுடன் அப்பகுதியில் சுகாதாரவளாகம் கட்டப்படும்.
ஜெயகவிதா:- பழைய பஸ் நிலையம் அருகே கோவில், பள்ளிக்கூடம், மருத்துவமனை, வங்கிகள் உள்ள இடத்தின் அருகே டாஸ்மாக்கடை பார் உடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
தலைவர்:- அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து அதற்கான தீர்வு காணப்படும்.
இறைச்சி கழிவு
அப்துல் ரகுமான்:- எங்கள் பகுதிகளில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நவீன மாட்டு இறைச்சி வதைக்கூடம் கட்ட வேண்டும்.
தலைவர்:- இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.